Thursday, November 14, 2019

அறிய மலர்

செந்தாமரையையும் வெண்தாமரையையும்
மிகையாகப் பார்த்து வளர்ந்து வரும்
உன் கருவறை நாட்களில்,

அதன் கதை அறிவாயோ உயிரே!

என் சிறு வயதில் ஆற்றில் நீராடுகையில்
தாமரையின் தண்டினைப் பிடித்து பழகியதும்,
அதை பறித்து உண்டதும், இன்றும்
- என் கண்களில்,

நவராத்திரியில் எனதம்மா
இலகுவாக தாமரை இலைகளை பறித்து
அன்னை சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும்
விரித்து வைக்கையில் - அதன் அழகே அழகு!

இன்னவராத்திரியில் நீயும் அத்தருணத்தைப் பார்த்து
மெய் சிலிர்த்து தானே போனாய் - அப்பந்த பிணைப்பில்!

இந்த அழகிய மலரின் வரலாறு தெரியுமா? -
தண்ணீரில் மண்ணோடு, சகதியோடு இருந்தாலும்
தானாக பூத்து, மலர வழி தேடிக் கொள்ளுமாம் !

தனக்கான சூர்யவெளிச்சத்தை, தானே
தேடிக்கொள்ளும் வாழ்வாவாதி!

சேற்றில் முளைத்த செந்தாமரை - எனினும்
அழகோ குணமோ மாறுவதே இல்லை!

தூய்மையை உணர்த்தும் மலர் - ஆம்!
உடல் தூய்மை மட்டும் அல்ல,
உள்ளத்தூய்மையும்...

"தாமரை இலை மேல் நீர் போல்" -
இம்மலரில் நீர் பட்டால்,
ஒட்டாது ஓடும் - வாழ்வில் எத்தகு
பாடத்தை உணர்த்துகிறது பார்த்தாயா?

இன்றும் பலருக்கு மிகப்பெரிய கேள்வி -
எப்படி இச்சிறு மலருக்குள்
ஒட்டுமொத்த வாழ்வியல் சிந்தனையும்
உள் அடக்கம்???

உறுதியற்ற நம்பிக்கை,
இலக்கை நோக்கிய பயணம்,
அழகான புதுப்பிப்புகள்
- நீ வாழும் நாட்களில் இவ்வனைத்தும் பெற
இம்மலரின் ஆசியுடன் வாழ்த்துகிறேன்!

எனைக் கருவாக தேர்ந்தெடுத்து
இவ்வுலகிற்கு எதை உணர்த்த
ஜனித்தாயோ? - அறியேன்...

அங்கனமே உணர்ந்தறிய
என் அன்புப் பரிசு
- இவ்வழகிய தேசிய மலர்....!

No comments: